சில்லிட்ட மலைதேசத்தில்
வாங்கி வந்த ரோஜாச்செடி
இந்த வெப்பத்தில்
உயிரை இன்னும் கையில் பிடித்திருக்கிறது
உதிர்ந்து கொண்டிருக்கும்
இல்லைகளைக் காணும் போது
தெரித்து சிதரிய என் நம்பிக்கைகளின்
ஞாபகங்கள் கண்முன்னே…
நொடிக்கொரு முறை வாசல் வரை
வந்து செல்கிறேன்
சொந்த வீடு வரை தினம் நினைவுகள்
சென்றுவந்ததை அசைபோட்டு
வாழ்விடத்தைப் பெயர்த்தெடுத்து
வர இயலாது வெறுமனே
கைவீசி மனம் கனத்து வந்த
மனநிலை இந்தச் செடிக்கும் இருக்கும் போலும்…
காயம் கொண்டதையெல்லாம் கண்ணீர் விட்டு
காணாமல் செய்திருக்கிறேன்
துயருற்ற உன்னை தண்ணீர் விட்டு
சமன் செய்ய முயற்சிக்கிறேன்…
கவலை வேண்டாம் வேர்வரை சென்று
இங்கு யாரும் ஆய்வுக்குட்படுத்துவதில்லை
பச்சையாய் என்னைப்போல் நீயும்
புன்னகைத்தால் போதும்
நம் மலர்களையும் வாசங்களையும்
இங்கு யாரும் கொண்டாடப்போவதில்லை…
- - சல்மா தினேசுவரி ( Salma Dhineswary)


Nice dear...
ReplyDeleteSuperb 🌹🌷🌹🌷🌹
ReplyDelete