உன் கண்ணின் வழி போகும்
வார்த்தைகள் காணாமல்
வாழ்விழந்து போனேன் நான்
குருடாகி நுடமாகி நுண்ணிதழில்
தமிழாகி உனக்காகச் சிதறியச்
சொற்களில் என்னை மீட்டெடுக்க
முயல்கிறேன்
தடத் தடக்கும் துரு பிடித்த
தண்டவாளங்களில் கூட தடம் மாறாது
போன இரயில் பயணங்களைப்
பத்திரமாகச் சேர்ப்பித்து வைத்துள்ளேன்
உள்ளத்தின் நான்கறையில் உன்னை
நிரப்பிக் கொண்டு
நரம்பிழந்த வீணையாய்
நாதங்களற்று நான்
வாழ்வை தொலைத்து வண்ணங்களைத்
தேடுகிறாய் நீ
வண்ணங்களைத் தொலைத்து
வாசங்களை வசப்படுத்திகொள்ள
முற்படுகிறேன் நான்
நெஞ்சில் இருத்திக் கொண்டே
இல்லை என்று வாழ்வதேது?
இருந்தும் இல்லாமலாய் போனதன்
காரணம் யாது?
உன் கண்ணின் வழி போகும்
வார்த்தைகள் காணாமல்
மீண்டும் வாழ்விழந்து போனேன் நான்
- சல்மா தினேசுவரி ( Salma Dhineswary)


No comments